வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துங்கள்
காசி விஸ்வநாதர் கோவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் நாளான வருகிற 13-ந் தேதி தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
நாகர்கோவில்,
காசி விஸ்வநாதர் கோவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் நாளான வருகிற 13-ந் தேதி தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காசி விஸ்வநாதர் ஆலயம்
இந்திய திருநாட்டின் பழம்பெருமையை உலக நாடுகள் அனைத்தும் போற்றுகின்றன. அதற்கு மூலகாரணமாக இருப்பது ஆதிகாலம் முதல் இருக்கின்ற பண்டைய கலாசாரங்களும், பழக்கவழக்கங்களும், பண்பாடும்தான். இதற்கு சாட்சியாக இருப்பவைகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி மாநகரமும் ஒன்று.
தமிழகத்தில் மதுரை, காஞ்சி, தஞ்சை, கும்பகோணம், ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகியவை பழமையும் பெருமையும் மிக்கதாக இருக்கிறது. அதுபோல உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் வணங்கக்கூடிய நகரமாக காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.
காசிக்கும் தமிழகத்துக்கும் தொடர்பு உள்ளது. 1813- ம் ஆண்டு முதல் காசி ஆலயத்தின் மூன்றுகால பூஜையையும் தமிழகத்தை சேர்ந்த நகரத்தார் சமுதாயத்தினர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். 239 ஆண்டுகளுக்குப்பிறகு 2018-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்த பெருமையும் தமிழ் சமுதாயத்துக்கு நகரத்தார் மூலமாக கிடைத்துள்ளது. இவ்வாறு காசிக்கும் நமக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.
ஒளி மிகுந்த நாள்
இந்த ஆலயத்தை எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் பிரதமர் நரேந்திரமோடியால் செய்யப்பட்டுள்ளது. ஆலயம் புதிய தோரணையோடு, எழுச்சிமிகு காட்சியோடு பிரதமர் நரேந்திரமோடி வருகிற 13-ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை உலக அளவில் கொண்டு செல்ல பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும்போது எல்லா மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செய்து வருகிறார்கள். அந்த நாளை ஒளி மிகுந்த நாளாக கொண்டாடப்பட வேண்டும்.
விவசாயிகள் மாநாடு
எனவே அன்றைய தினம் தமிழகம் முழுவதும் இருக்கும் எல்லா வீடுகளிலும் பொதுமக்கள் ஒளி ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும். அப்படி வழிபாடு நடத்தும் போது காசிக்கே சென்று வணங்கிய பாக்கியம் கிடைக்கும். காசியில் வரும் 14-ந் தேதி மிகப்பெரிய கருத்தரங்கம் நடக்கிறது. அதில் நாடு முழுவதும் உள்ள முதல்வர்கள், துணை முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார். வருகிற 13, 14, 15-ந் தேதிகளில் மூன்று நாள் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகளில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள்.
17-ந் தேதி நாடு முழுவதும் உள்ள மேயர்களுக்கான மாநாடு நடக்கிறது. 23-ந் தேதி விவசாயிகளுக்காக இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்கள் குறித்த மாநாடு காசியில் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
நாகாலாந்து பிரச்சினை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கொரோனா, ஒமைக்ரான் போன்ற காரணங்களைச் சொல்லி சபரிமலையில் எதையும் முடக்கக்கூடாது சபரிமலையில் நெய் அபிஷேகம் போன்ற விஷயங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலை கேரளத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் உமாரதிராஜன், மாவட்ட பார்வையாளர் தேவ், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், மண்டல தலைவர்கள் அஜித், நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story