மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவி, 2 பிள்ளைகளை கொன்று கார் டிரைவர் தற்கொலை


மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவி, 2 பிள்ளைகளை கொன்று கார் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Dec 2021 3:15 AM IST (Updated: 9 Dec 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவி, 2 பிள்ளைகளை கொன்று கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம் மங்களூருவில் நடந்து உள்ளது.

மங்களூரு:

கார் டிரைவர்

  பாகல்கோட்டை மாவட்டம் பீலகி தாலுகா சுனகா கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ்(வயது 30). இவரது மனைவி விஜயலட்சுமி(26). இந்த தம்பதிக்கு சப்னா(8), சமர்த்(4) என்ற 2 பிள்ளைகள் இருந்தனர்.

  நாகேஷ் தனது மனைவி, 2 பிள்ளைகளுடன் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பாண்டேஸ்வர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மோர்கன்ஸ் கேட் பகுதியில் வசித்து வந்தார். நாகேஷ் கார் டிரைவராக வேலை செய்தார். விஜயலட்சுமி ஒரு வணிக வளாகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

திடீர் மாயம்

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நாகேஷ், விஜயலட்சுமி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி திடீரென மாயமானார். அவர் மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் நாகேஷ் போலீசில் புகார் அளித்து இருந்தார்.

  அதன்பேரில் மாயமான விஜயலட்சுமியை போலீசார் தேடினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த விஜயலட்சுமி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் நாகேசுடன் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.

தூக்கில் ெதாங்கினார்

  இந்த நிலையில் நேற்று காலை விஜயலட்சுமி வேலைக்கு செல்லவில்லை. இதனால் விஜயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு அவருடன் வேலை செய்பவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

  இதற்கிடையே நேற்று காலை நாகேசின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை நீண்ட நேரமாக தட்டிப்பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது நாகேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் சப்னா, சமர்த் வாயில் நுரைதள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

கடிதம் சிக்கியது

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் பாண்டேஸ்வர் போலீசார், அங்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே போலீசார் சென்றனர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி, 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நாகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஆனால் இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

  இதற்கிடையே நாகேஷ் அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் நாகேஷ் எழுதியதாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதம் மாறி விடுவார் என்ற...

  எனது(நாகேஷ்) மனைவி விஜயலட்சுமியும், நூர்ஜஹான் என்ற பெண்ணும் பழகி வந்தனர். எனது மனைவி விஜயலட்சுமியை, நூ்ாஜஹான் முஸ்லிம் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார். எனது மனைவியின் நடவடிக்கையும் கடந்த சில நாட்களாக சரியில்லை. இதனால் அவர் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி இருந்தார்.

  அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்று இருந்தனர். அந்த கடிதத்தின் அடிப்படையில் பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் நூர்ஜஹானை பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதம் மாறி விடுவார் என்ற பயத்தில் மனைவி, 2 பிள்ளைகளை கொன்று கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story