‘தேவேகவுடாவை கொள்கை ரீதியாக எதிர்க்கிறேன்’ - சித்தராமையா பேட்டி
தேவேகவுடாவை கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைவெளியை பின்பற்றினோம்
கர்நாடக மேல்-சபை தேர்தலையொட்டி நாங்கள் பிரசாரம் செய்தோம். இதில் நாங்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றினோம். எங்கள் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5 இடங்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தலா ஒரு இடம், ஒரு பெண், சிறுபான்மையினர் பிரிவுக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் உள்பட அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் தான் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் மாநில பா.ஜனதா அரசு, தோல்வி பயத்தால் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலை ஒத்தி வைத்துள்ளது.
நிவாரணம் வழங்கவில்லை
மாநில அரசின் மோசமான முடிவு காரணமாக இந்த முறை மேல்-சபை தேர்தலில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, வேலை உறுதி திட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டது. அது போல் பா.ஜனதா ஆட்சியில் ஏதாவது முக்கியமான சட்டங்கள் கொண்டு வரப்பட்டதா?.
இந்த பா.ஜனதா ஆட்சியில் ஏழை விவசாயிகள் மேலும் ஏழையாகி வருகிறார்கள். அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் தான் வளர்ந்து வருகிறார்கள். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது இல்லை. ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி அளவை குறைக்கிறார்கள். மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
கோபம் இல்லை
கொரோனா பரவலின்போது, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியை செய்து கொடுக்கவில்லை. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டுவதிலும் பொய் தகவல்களை வெளியிட்டனர். வென்டிலேட்டர், மருந்துகள் வாங்கியதில் முறைகேடு செய்தனர். இந்த அரசில் லஞ்சம் கொடுக்காவிட்டால் எந்த பணியும் நடப்பது இல்லை.
வளர்ச்சி, சாதனைகள் மூலம் வெற்றி பெற முடியாது என்று பா.ஜனதா நினைக்கிறது. அதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி அக்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். குமாரசாமி மீதோ அல்லது தேவேகவுடா மீதோ எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. கொள்கை அடிப்படையில் அவர்களை எதிர்த்து பேசுகிறேன்.
மேகதாது திட்டம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்க்கும் குமாரசாமி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி செய்தார். தேர்தலில் அந்த கட்சியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அதை நான் விமர்சிக்கிறேன். மேகதாது திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்ததே எனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் அரசு. இந்த மேகதாது திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி நாங்கள் பாதயாத்திரை நடத்துகிறோம். பாதயாத்திரையில் நானும் பங்கேற்கிறேன். மாநிலத்தின் நலனில் அக்கறை உள்ள யாரும் இதில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story