போலீஸ் அதிகாரி வீட்டில் திருடிய வேலைக்கார பெண் கைது
பெங்களூருவில் போலீஸ் அதிகாரி வீட்டில் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
இணை போலீஸ் கமிஷனர்
பெங்களூரு மாநகர போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் ரவிகாந்தே கவுடா. இவர், பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே வீட்டில் இருந்த பணம், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது.
இணை போலீஸ் கமிஷனர் வீட்டிலேயே திருட்டு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து ரவிகாந்தே கவுடாவிடம் கார் டிரைவராக வேலை செய்து வரும் ஜெகதீஷ் என்பவர் சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
வேலைக்கார பெண் கைது
இதற்கிடையில், ரவிகாந்தே கவுடா வீட்டில் வேலை செய்து வந்த அங்கீதா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வேலையில் இருந்து நின்று இருந்தார். இதையடுத்து, அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. உடனே அங்கீதாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அங்கீதாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா வீட்டில் திருடியதை அங்கீதா ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அங்கீதாவை போலீசார் கைது செய்தார்கள். ரவிகாந்தே கவுடா, அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், செல்போன்கள், பணத்தை திருடிவிட்டு அங்கீதா தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரவிகாந்தே கவுடா வீட்டில் திருடிய நகை, பணம், பொருட்கள் மீட்கப்பட்டது. கைதான அங்கீதா மீது சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story