சேலத்தில் வெவ்வேறு சம்பவம்:சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு-மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைவரிசை
சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 11 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 11 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருைடய மனைவி சுகுணா (வயது 52). இவர் நேற்று காலை வீட்டின் அருேக வசிக்கும் தனது தாயாருக்கு காலை உணவு கொடுப்பதற்காக நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் திடீரென சுகுணாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம்போட்டு கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (40). இவர், சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று காலை ஊரில் இருந்து பஸ்சில் வந்த சாந்தி, ராமகிருஷ்ணா பூங்கா பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாந்தி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
விசாரணையில், சாலையில் நடந்து சென்ற சாந்தி மற்றும் சுகுணா ஆகியோரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது ஒரே வாலிபர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலத்தில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story