திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஒப்பந்த தொழிலாளி


திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஒப்பந்த தொழிலாளி
x
தினத்தந்தி 9 Dec 2021 2:38 PM IST (Updated: 9 Dec 2021 2:38 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. இங்கு 152 மலேரியா பிரிவு ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 7 பேர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மலேரியா ஒப்பந்த தொழிலாளர் தாமஸ் என்பவர், திருவொற்றியூர் மண்டல அலுவலக வளாகத்தில் நேற்று மாலை திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சக ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து பணி நீக்கத்தை கண்டித்து 7 ஊழியர்களும் மண்டல வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக, கால்வாய் பணியில் இருந்து நீக்கப்பட்ட 6 ஊழியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மண்டல அலுவலர் சங்கரனிடம் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story