புகையிலை கலந்த உணவுப்பொருள் விற்பனை; 40 வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்


புகையிலை கலந்த உணவுப்பொருள் விற்பனை; 40 வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 9 Dec 2021 5:01 PM IST (Updated: 9 Dec 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்த 40 வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகையான கடைகளிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நிகோட்டின், புகையிலை கலந்த உணவுப்பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். 

உணவு மாதிரி எடுக்க தேவையான அளவைவிட குறைவாக தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்களை வைத்திருக்கும் உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலரே அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையர் அதிகாரம் அளித்து உள்ளார். அதன்படி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்ததற்காக, புதூர், விளாத்திகுளம் ஒன்றியத்தில் 12 வியாபாரிகளுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தில் தலா 6 வியாபாரிகளுக்கும், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் 5 வியாபாரிகளுக்கும், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஒன்றியங்களில் தலா 3 வியாபாரிகளுக்கும், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மற்றும் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியங்களில் தலா ஒரு வியாபாரிக்கும் ஆக மொத்தம் 40 வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சிறை தண்டனை

மேலும் தடை செய்யப்பட்ட நிகோட்டின், புகையிலை கலந்த உணவுப்பொருட்கள் உணவு மாதிரி எடுக்கும் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டால், அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதனால், 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் கோர்ட்டால் விதிக்கப்படும். மேலும், பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வைத்திருந்த கடைகளை மூடுவதற்கு நியமன அலுவலர் ஆணையிடவும் சட்டத்தில் அதிகாரம் உண்டு.

தடை செய்யப்பட்ட நிகோட்டின், புகையிலை கலந்த உணவுப்பொருட்கள் உணவு மாதிரி எடுக்க தேவையான அளவைவிட குறைவாக வியாபாரிகள் வைத்திருந்தால், முதல் முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும், அபராதமாக நியமன அலுவலரால் விதிக்கப்படும். 3-வது முறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடையின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்து, கடை மூடப்படும்.

எச்சரிக்கை

எனவே, வியாபாரிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நிகோட்டின், புகையிலை கலந்த உணவுப்பொருட்களின் விற்பனையை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் கடைகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற பொருட்கள் விற்பனை குறித்து 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத்துறையின் மாநில வாட்ஸ்அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகார் அளிப்பவரின் விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story