தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு


தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 9 Dec 2021 5:12 PM IST (Updated: 9 Dec 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திருச்செந்தூர் பேரூராட்சி, நகராட்சியாக அறிவிக்கப்பட்டு இருப்பதால், அங்கு வார்டு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் திருச்செந்தூர் தவிர மற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தூத்துக்குடி மாநகராட்சிக்கான வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிட, அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி மாநகராட்சியில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 763 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 64 ஆயிரத்து 570 பெண் வாக்காளர்கள், 55 திருநங்கைகள் ஆக மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 388 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியில் 60 வார்டுகளில் மொத்தம் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 66 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.

மேலும் கோவில்பட்டி நகராட்சியில் 17 ஆயிரத்து 808 ஆண் வாக்காளர்கள், 18 ஆயிரத்து 327 பெண் வாக்காளர்கள், ஒரு திருநங்கை ஆக மொத்தம் 36 ஆயிரத்து 136 வாக்காளர்களும், காயல்பட்டினம் நகராட்சியில் 39 ஆயிரத்து 336 ஆண் வாக்காளர்கள், 40 ஆயிரத்து 742 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் ஆக மொத்தம் 80 ஆயிரத்து 96 வாக்காளர்களும் உள்ளனர். 

6 லட்சத்து 17 ஆயிரம் வாக்காளர்கள்

மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளில் 86 ஆயிரத்து 648 ஆண் வாக்காளர்கள், 91 ஆயிரத்து 824 பெண் வாக்காளர்கள், 12 திருநங்கைகள் ஆக மொத்தம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 3 லட்சத்து 1,555 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 15 ஆயிரத்து 463 பெண் வாக்காளர்கள், 86 திருநங்கைகள் ஆக மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரத்து 104 வாக்காளர்கள் உள்ளனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆறுமுகக்கனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மைக்கேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) ராமநாதன் மற்றும் அரசியல் கட்சியினர், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story