அரசு பள்ளியில் இடபற்றாக்குறை கழிப்பிட வசதி இல்லாததால் கடும் அவதி


அரசு பள்ளியில் இடபற்றாக்குறை  கழிப்பிட வசதி இல்லாததால் கடும் அவதி
x
தினத்தந்தி 9 Dec 2021 8:55 PM IST (Updated: 9 Dec 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் இடபற்றாக்குறை கழிப்பிட வசதி இல்லாததால் கடும் அவதி

பொள்ளாச்சி

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. ஆனால் அந்த பள்ளியில் இடபற்றாக்குறை, கழிப்பிட வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இடபற்றாக்குறை

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு ராமகிருஷ்ணா நகரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. பொள்ளாச்சியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளை விட, ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளிலேயே இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் இல்லை. இதனால் இடநெருக்கடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் பாடம் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி பள்ளியில் கடந்த ஆண்டு 520 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இதற்கிடையில் கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தினர். மேலும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியும் உள்ளது. மேலும் பள்ளி ஆண்டு விழாக்கள் தனியார் பள்ளிகளை போன்று தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்படுகிறது. மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இலக்கிய மன்றம் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளின் திறமைகள் வெளிக் கொண்ட வரப்படுகிறது.
இதனால் சிறந்த பள்ளி என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. தற்போது எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 962 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பொள்ளாச்சி நகர பகுதி மட்டுமல்லாது மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், சூளேஸ்வரன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இந்த ஆண்டு தனியார் பள்ளியில் இருந்து மட்டும் 400 மாணவ-மாணவிகள் இந்த பள்ளிக்கு வந்து உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் இடபற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுழற்சி முறையில் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வரவழைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஒரு வகுப்பு மாணவர்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வர முடிகிறது. மேலும் தற்போதைய மாணவர் சேர்க்கைக்கு 10 ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன. போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் இருக்கைகள் மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். இதற்கிடையில் போதிய கழிப்பிட வசதி இல்லாமலும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பள்ளி சார்பில் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதை தவிர இணையதள வசதி, கதவு, ஜன்னல்கள் பழுது பார்த்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story