தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்
தூத்துக்குடியில் தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த 25-ந் தேதி பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது. ஆனாலும் முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர், தனசேகரன் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மறுவாழ்வு மையத்தில் தேங்கிய மழைநீர்
மேலும் தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் புனித ஜோசப் தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. கிறிஸ்தவ அருட்சகோதரிகள் நடத்தி வரும் இந்த மையத்தில் 35-க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தொழுநோயாளிகள் மறுவாழ்வு மைய வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக மையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு பகுதி, மருத்துவமனை பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மழைநீரால் பெரிதும் துன்பப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் மழைநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் பாதிக்கப்பட்ட அருட்சகோதரிகள், தொழுநோயாளிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் என சுமார் 50 பேர் நேற்று மாலை மறுவாழ்வு மையத்துக்கு முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த தாளமுத்துநகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பெரியநாயகிபுரம்
இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள பெரியநாயகிபுரம் பகுதியில் கனமழை காரணமாக பெய்த மழை நீர் வெளியேறாமல் தேங்கி கிடக்கிறது. அய்யனடைப்பு கைலாசபுரம் செக்காரக்குடி போன்ற இடங்களில் இருந்து வரக்கூடிய தண்ணீர் மடையை தற்காலிகமாக மாநகராட்சி மூலம் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதால் கோரம்பள்ளம் 8-ம் நம்பர் மடையின் வழியாக தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.
நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி உள்ளதால், சிறுவர்கள் அந்த தண்ணீரில் மீன்பிடிக்கின்றனர். அதே நேரத்தில் சுகாதார சீர்கேடும் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story