திருக்கோவிலூர் அருகே துணிகரம்: விவசாயியை கத்திமுனையில் கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை முகமூடி அணிந்த 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


திருக்கோவிலூர் அருகே துணிகரம்: விவசாயியை கத்திமுனையில் கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை முகமூடி அணிந்த 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Dec 2021 10:25 PM IST (Updated: 9 Dec 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து விவசாயியை கத்திமுனையில் கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்கோவிலூர், 

விவசாயியை கட்டிப்போட்டு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் குப்பத்துமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன் (வயது 86), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் அங்கு முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பக்க கதவை ஆயுதங்களால் உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அந்த கும்பல் செல்வநாதனின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம்  போட்டால் கொலை செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டியதோடு, அவரை கயிற்றால் கட்டிப்போட்டனர். மேலும் அவருடைய வாயில் துணியை வைத்து திணித்தனர். 

நகை-பணம் கொள்ளை

அதன்பிறகு அந்த கும்பல் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். அதன்பிறகு செல்வநாதன் வாயில் திணித்திருந்த துணியை பெரும் சிரமங்களுக்கு இடையே அகற்றிவிட்டு காப்பாற்றக்கோரி அபயகுரல் எழுப்பினார். இதைகேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து செல்வநாதனை மீட்டதோடு, இதுபற்றி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டதோடு, செல்வநாதனிடம் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் சாய்னா கொள்ளை நடந்த வீட்டில் இருந்து வீட்டின் பின்பக்க கரும்பு தோட்டம் வழியாக மோப்பம் பிடித்தபடி ஓடிச் சென்று கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.இச் சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story