3 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் 7¼ லட்சம் வாக்காளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார். 3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 535 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நாகர்கோவில்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார். 3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 535 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நகர்புற அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நகர்ப்புற வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஆணையர், செயல் அலுவலர்களால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) ஆகியவற்றில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளின் மொத்த வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
வாக்காளர்கள் விவரம்
3 நகராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் 28 ஆயிரத்து 461 பேரும், பெண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 381 பேரும், திருநங்கைகள் 6 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 848 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 77 ஆகும்.
51 பேரூராட்சிகளில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 832 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 35 ஆயிரத்து 812 பெண் வாக்காளர்களும், 43 திருநங்கைகளும் என மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 867 ஆகும்.
3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் மொத்தம் 7 லட்சத்து 29 ஆயிரத்து 535 வாக்காளர்கள் உள்ளனர்.
பெயர் சேர்க்கலாம்
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பமோ அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது அப்பட்டியலில் கண்ட விவரத்திற்கோ மறுப்புரை தர விரும்புவோர் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரை அணுகலாம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாள் வரை வரப்பெறும் கோரிக்கைகள் தொடர்பாக திருத்தம் செய்யப்படும்.
வாக்குச்சாவடிகள் விவரம்
தேர்தல் நடைபெற உள்ள 3 நகராட்சிகளில் குளச்சல் நகராட்சியை பொருத்தமட்டில் 24 வார்டுகள் உள்ளது. இங்கு 34 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு 21 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு 22 வாக்குச்சாவடிகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளிலும் 822 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்காக 867 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்தமட்டில் தற்போது ஆளுர் மற்றும் தெங்கம்புதூர் பேரூராட்சியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொல்லங்கோடு நகராட்சியுடன் ஏழுதேசம் பேரூராட்சியை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
வார்டு மறுவரையறை
இதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினருடன் கலெக்டர் அரவிந்த் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே 52 வார்டுகள் உள்ளது. தெங்கம்புதூர், ஆளுர் பேரூராட்சிகள் இணைக்கப்பட உள் ளது. இந்த பேரூராட்சிகள் இணைக்கப்படும் போது வார்டு மறு வரையறை செய்யப்படும். அப்போது பொது மக்களிடம் கருத்து கேட்டு வார்டு மறுவரையறை செய்ய வேண்டும். ஒரே பகுதியை இரண்டு, மூன்று பகுதிகளாக பிரிக்காத வகையில் வார்டு மறு வரையறை செய்ய வேண்டும், என்றார். இதற்கு பதிலளித்த கலெக்டர் அரவிந்த் மக்கள் தொகை அடிப்படையில் தான் வார்டு மறுவரையறை செய்யப்படும். அரசியல் கட்சியினரின் கருத்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்படும், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், நகராட்சி ஆணையாளர்கள் ராஜமாணிக்கம் (குளச்சல்), காஞ்சனா (பத்மநாபபுரம்), பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், தி.மு.க. சார்பில் அகஸ்தீசன், வர்க்கீஸ், அ.தி.மு.க. மாநகர செயலாளர் சந்துரு, பா. ஜனதா கட்சி சார்பில் நாகராஜன், ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இசக்கிமுத்து, தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
900 பெண் வாக்காளர்கள் அதிகம்
நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் நகராட்சிகளைப் பொறுத்தவரையில் ஆண் வாக்காளர்களைவிட 920 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். பேரூராட்சிகளில் பெண் வாக்காளர்களைவிட 20 ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இரண்டிலும் சேர்த்து ஆண் வாக்காளர்களைவிட 900 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story