மு.க.ஸ்டாலின் எதார்த்தத்தை காட்டிலும் அதிகமாக பணியாற்றுகிறார்
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதார்த்தத்தை காட்டிலும் அதிகமாக பணியாற்றுகிறார் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
மதுரை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதார்த்தத்தை காட்டிலும் அதிகமாக பணியாற்றுகிறார் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
அவதூறு வீடியோ
திருச்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர், யூ-டியூப்பில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஏற்கனவே இவர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறு வீடியோ வெளியிட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. அவதூறு நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஜாமீனை ரத்து செய்ய மனு
இந்த நிலையில் அவர், கோர்ட்டு விதித்த நிபந்தனையை மீறியதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போலீசார் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் இந்த கோர்ட்டில் அளித்த உறுதிமொழியை மீறி அவதூறாக பேசி வருகிறார் என்று தெரிவித்தார். இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
எதார்த்தத்தை காட்டிலும்...
இதையடுத்து நீதிபதி, “கோர்ட்டில் அளிக்கும் உறுதிமொழிப்பத்திரம் என்பது வெறும் காகிதம் தானே என்று நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழக முதல்-அமைச்சர் எதார்த்தத்தை காட்டிலும் அதிகமாக பணியாற்றி வருகிறார். இதை நீங்கள் (மனுதாரர் தரப்பு) பாராட்ட வேண்டாம். ஆனால் கண்டதை எல்லாம் பேச முடியாது” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், “மனுதாரர் தொடர்பான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை பொறுமையாக உட்கார்ந்து கேட்க இந்த கோர்ட்டுக்கு நேரம் கிடையாது. அதில் என்ன இருக்கிறது என்பதை அரசு தரப்பினர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள். நிபந்தனையை மீறி, மனுதாரர் அவதூறாக ஒரு வார்த்தை பேசியிருந்தால், அவருக்கு அளித்த ஜாமீன் ரத்து செய்யப்படும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story