மொபட்டில் இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓடிய வாலிபர். விரட்டிச் சென்று பணத்தை மீட்ட பெண் போலீஸ்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் மொபட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை வாலிபர் பறித்துக்கொண்டு சென்றார். அவரை பெண் போலீஸ்காரர் விரட்டிச் சென்று பணத்தை மீட்டார்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் மொபட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை வாலிபர் பறித்துக்கொண்டு சென்றார். அவரை பெண் போலீஸ்காரர் விரட்டிச் சென்று பணத்தை மீட்டார்.
ரூ.50 ஆயிரம் திருட்டு
வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா 2-வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் (வயது 60), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர். இவருடைய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி அகஸ்டின் நேற்று காலை சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலக சாலையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுத்தார். அதனை ஒரு பையில் வைத்து அவருடைய மொபட் சீட்டின் அடியில் வைத்து பூட்டி உள்ளார்.
பின்னர் அவர் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் பணிபுரியும் தம்பியை பார்க்க சென்றார். மொபட்டை சித்த மருத்துவமனையின் முன்பாக நிறுத்திவிட்டு சென்றார். சிறிதுநேரத்துக்கு பின்னர் வெளியே வந்தபோது அவருடைய மொபட்டின் சீட்டின் பூட்டை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் லாவகமாக திறந்து ரூ.50 ஆயிரம் வைத்திருந்த பணப்பையை வெளியே எடுத்து கொண்டிருந்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த அகஸ்டின் திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார்.
மோட்டார் சைக்கிளில் தப்பினர்
இதையடுத்து அந்த வாலிபர் பணப்பையுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அகஸ்டின் கூச்சலை கேட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தப்பி்சென்ற வாலிபரை விரட்டிச் சென்றனர். அவர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் நோக்கி ஓடினார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஜீவிதா அந்த வாலிபரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அவர், ஜீவிதாவின் கையை தட்டி விட்டு வேகமாக கலெக்டர் அலுவலக மெயின்சாலைக்கு சென்றார்.
அங்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்தனர்.
பணத்தை மீட்ட பெண் போலீஸ்
அதன்பின் அந்த வாலிபர் இருவருடன் மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றார் ஆனால் பெண் போலீஸ் ஜீவிதா விரட்டிச் சென்று வாலிபர் கையில் வைத்திருந்த பணப்பையை பிடுக்கினார்.
அப்போது 3 பேரில் ஒருவரின் செல்போன் தவறி சாலையில் விழுந்தது. 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர். பணத்தை மீட்ட பெண்போலீஸ் ஜீவிதா செல்போனையும் கைப்பற்றினார்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் சம்பவ இடத்துக்கு சென்று அகஸ்டின் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். மேலும் போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் சம்பந்தப்பட்ட வாலிபரின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
செல்போன் எண் மூலம் மர்மநபர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்திலேயே கைவரிசை
வேலூரில் பல்வேறு இடங்களில் மோட்டார்சைக்கிளில் வரும் கொள்ளையர்கள் பணம் பறிப்பு, பெண்களிடம் செயின்பறிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு தப்பி வந்தனர்.
இப்போது அவர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story