கரூர் மாணவி தற்கொலை:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கலெக்டரிடம் மனு


கரூர் மாணவி தற்கொலை:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Dec 2021 12:06 AM IST (Updated: 10 Dec 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவருடைய இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவியின் தாயார் கலெக்டரிடம் மனு அளித்தார்.

கரூர், 
பிளஸ்-2 மாணவி தற்கொலை
கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, மாணவியின் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும் என எழுதி கையெழுத்திட்டு இருந்தார். 
மாணவர்கள் போராட்டம்
இந்த கடிதத்தை ஆதாரமாக வைத்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னரில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடந்த 24-ந் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மாணவர்களின் திடீர் போராட்டம் காரணமாக கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தனிப்படை அமைப்பு
இதனைதொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் மாணவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் பிரச்சினை எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 
இதில் சமாதானம் அடைந்த மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலெக்டரிடம் மனு
இந்தநிலையில் அந்த மாணவியின் தாயார் கலெக்டர் பிரபு சங்கரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் தனது மகளின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

Next Story