லண்டனில் நைட்டிங்கேல் விருது பெற்ற கீழடி ஆண் நர்சு


லண்டனில் நைட்டிங்கேல் விருது பெற்ற கீழடி ஆண் நர்சு
x
தினத்தந்தி 10 Dec 2021 12:16 AM IST (Updated: 10 Dec 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண் நர்சு ஒருவர் லண்டனில் நைட்டிங்கேல் விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார். அவர், நர்சு என்பது தொழில் அல்ல. சேவை என பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை, 
கீழடியை சேர்ந்த ஆண் நர்சு ஒருவர் லண்டனில் நைட்டிங்கேல் விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார். அவர், நர்சு என்பது தொழில் அல்ல. சேவை என பெருமிதத்துடன் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்
இங்கிலாந்தில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து மருந்துவ துறையில் நர்சாக பணிபுரிந்து ராணுவ வீரர்களுக்கும், ஏழை மக்களுக்கும் சேவையாற்றியவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். இவர் பிறந்த மே 12-ந் தேதி தான் உலக நர்சுகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது நினைவாக சிறப்பாக சேவை செய்த நர்சுகளுக்கு இங்கிலாந்தில் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை லண்டனில் நர்சாக இருக்கும் மதுரை அருகே கீழடியை சேர்ந்த ஆண் நர்சு டேனியல் விஜயராஜ் பெற்றுள்ளார். இவரது தந்தை விஜயராஜ், மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்தவர். தாய் சரோஜினி பாய், அரசு பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாராள், திருச்சியை சேர்ந்தவர்.. மகள் மோனிகா லண்டனில் உள்ள கல்லூரியில் இளநிலை படிப்பு படித்து வருகிறார். இந்த நைட்டிங்கேல் விருது மூலம் தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த டேனியல் விஜயராஜ் கூறியதாவது:-
நான் கீழடியில் பிறந்து அங்குள்ள அரசு பள்ளியில் தான் தமிழ் வழிக்கல்வியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். அதே பள்ளியில் தான் எனது தாயும் ஆசிரியையாக இருந்தார். எனவே அவர் ஒரு தாயாக மட்டுமல்லாமல், பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். 9 மற்றும் 10-ம் வகுப்பை மதுரை புனித மரியன்னை பள்ளியில் படித்தேன். அதன்பின் மேல்நிலை கல்வியை கமுதி சத்திரிய நாடார் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முடித்தேன். அதோடு கல்லூரியில் என்.சி.சி. கடற்படை பிரிவில் கேப்டனாக இருந்தேன்.
அமெரிக்கன் கல்லூரி
நான் அமெரிக்கன் கல்லூயில் இறுதியாண்டு படிக்கும் போது எனது தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவரை நர்சுகள் சிறப்பாக கவனித்து கொண்டார்கள். அதனை பார்த்த எனக்கு, நாமும் நர்சாக பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். எனவே அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவுடன், மதுரை மிஷன் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேர்ந்து 1997-ம் ஆண்டு பட்டம் பெற்றேன். அதன்பின் சென்னையில் நர்சாக பணியாற்றினேன்.
அந்த சூழ்நிலையில் 2003-ம் ஆண்டு லண்டனில் நர்சாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்து இப்போது வரை லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறேன். ஆரம்பத்தில் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நர்சாக பணியாற்றினேன். இப்போது சவுத் டீஸ் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு நர்சாக இருக்கிறேன். கொரோனா காலத்தில் அதிக நோயாளிகளுக்கு சேவை ஆற்றினேன். நோயாளிகளின் பரிந்துரையின் பேரில் தான் எனக்கு இந்த நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டுள்ளது. நர்சு என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை. நோயாளிகளுக்கு சேவை செய்வதில் மனதிருப்தி இருக்கிறது. ஓய்வு பெறும் வரை நர்சாக பணிபுரிவேன். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் நர்சு பணியில் சிறப்பாக செயல்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story