முதியவரின் ஸ்கூட்டரில் ரூ.6 லட்சம் திருட்டு


முதியவரின் ஸ்கூட்டரில் ரூ.6 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 10 Dec 2021 1:17 AM IST (Updated: 10 Dec 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் முதியவரின் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் தீர்த்தனகிரி சம்பாரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பங்காருசாமி (வயது 64). இவர் நேற்று காலை கடலூர் முதுநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கு அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்து, ஒரு பையில் வைத்தார். பின்னர் அதனை தனது ஸ்கூட்டரில் உள்ள இருக்கையின் கீழ் பகுதியில் வைத்துக் கொண்டு, வீட்டுக்கு புறப்பட்டார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் காலை 11.30 மணி அளவில் வந்த போது, அங்குள்ள ஒரு பேக்கரி முன்பு பங்காருசாமி, தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, பலகாரம் வாங்க சென்றார். பின்னர் 10 நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்த போது, ஸ்கூட்டர் இருக்கை மேலே தூக்கியபடி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இருக்கையின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியை பார்த்தார்.

ரூ.6 லட்சம் திருட்டு 

அப்போது அதில் வைத்திருந்த பணப்பையை காணவில்லை. இதனால் பதறிய அவர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஸ்கூட்டரின் இருக்கையை நைசாக திறந்து, அதன் கீழ் பகுதியில் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வண்டிப்பாளையம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அதன் அடிப்படையில் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story