தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
தினத்தந்திக்கு நன்றி
திண்டுக்கல் மக்கான்தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். இதற்கான ‘தினத்தந்தி’ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். -உமர், திண்டுக்கல்.
சுகாதாரக்கேடு அபாயம்
தேனி அல்லிநகரம் 12-வது வார்டு குறிஞ்சிநகரில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களிலும், திறந்தவெளியிலும் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். -பரத், அல்லிநகரம்.
குளத்தை தூர்வார வேண்டும்
தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் உள்ள குளம் தூர்வாரப்படவில்லை. குளம் முழுவதும் முட்செடிகள் வளர்ந்து காடு போன்று காட்சி அளிக்கிறது. மேலும் குளத்தில் பல பகுதிகள் மண்மேடாக மாறிவிட்டதால், தேவையான அளவு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் போது விளைநிலங்களுக்கு தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகின. எனவே மழைநீரை சேமிக்க குளத்தை தூர்வார வேண்டும்.-சிவாஜி, சீலையம்பட்டி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூரில் ஜி.எஸ்.காலனியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் அதில் இறங்கி தான் நடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய் வசதி செய்து தரவேண்டும். -ஜெயச்சந்திரன், சிலுவத்தூர்.
அடிப்படை வசதி தேவை
கம்பம் நகராட்சி 4-வது வார்டு மாலையம்மாள்புரம் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தெரு முழுவதும் பள்ளம், மேடாக காட்சி அளிப்பதால் மழைக்காலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும் தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரன், கம்பம்.
Related Tags :
Next Story