நாகர்கோவிலில் மீண்டும் கடும் போக்குவரத்து நெரிசல்
பாதாள சாக்கடை திட்ட பணியால் நாகர்கோவில் நகரில் மீண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மோசமான சாலைகளாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
நாகர்கோவில்,
பாதாள சாக்கடை திட்ட பணியால் நாகர்கோவில் நகரில் மீண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மோசமான சாலைகளாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
போக்குவரத்து மாற்றம்
நாகர்கோவில் மாநகரில் கம்பளம் சந்திப்பு முதல் ஈத்தாமொழி பிரிவு ரோடு வரை பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற இருப்பதால் நேற்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று ஈத்தாமொழி பிரிவு ரோடு சந்திப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக குழிகள் தோண்டும் பணி தொடங்கியது. எனவே கேப் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நாகர்கோவில் கம்பளம் ரோடு சந்திப்பிலும், ஈத்தாமொழி பிரிவு ரோடு சந்திப்பு பகுதியிலும் பேரிகார்டுகளால் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலய சந்திப்பு மார்க்கமாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையான கம்பளம் ரோடு சந்திப்பில் இருந்து ரெயில்வே பீடர் ரோடு, நாயுடு ஆஸ்பத்திரி சந்திப்பு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
வாகன ஓட்டிகள்
அதேபோல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலயம் சந்திப்பு மார்க்கமாக பீச்ரோடு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரக்கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் இதர அனைத்து வாகனங்களும் பீச்ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன.
கோட்டார் சந்தை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் நிறைந்த பகுதி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டதாலும், சாலைகள் படுகுழிகளாகவும், பாதாள பள்ளங்களாக இருப்பதாலும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட வாகனங்களால் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடி சென்றன. எனவே மீண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் கம்பளம் ரோடு மற்றும் நாயுடு ஆஸ்பத்திரி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நின்று வாகன போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். இருப்பினும் மோசமான சாலைகளின் காரணமாக வாகனங்களை சீராக இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
கோரிக்கை
இதனால் நாகர்கோவில் கேப் ரோட்டில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து கம்பளம் ரோடு வழியாக வாகனங்கள் இடலாக்குடி பகுதியை சென்றடைய அரை மணி நேரத்துக்கு மேல் ஆனது. எனவே நேற்று காலை முதல் இரவு வரை இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றிவிடப்படும் சாலைகளில் மட்டுமாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேட்ஜ் ஒர்க் மூலம் சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story