தேசிய கல்வி கொள்கை குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


தேசிய கல்வி கொள்கை குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x
தினத்தந்தி 10 Dec 2021 2:11 AM IST (Updated: 10 Dec 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கல்வி கொள்கையானது, துடிப்பான அறிவு சமூகமாக இந்தியாவை மாற்ற உதவும்' என்று பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

திருச்சி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பங்கேற்று விழா சிறப்புரையாற்றினார். உயர்கல்வித் துறை அமைச்சரும், இணைவேந்தருமான பொன்முடி, புதுடெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக தலைவர் (பொறுப்பு) கனகசபாபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் அறிமுக உரையாற்றினார். பதிவாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த 44 இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், 42 முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டம் (பி.எச்.டி) முடித்த 2,139 மாணவர்கள் என மொத்தம் 2,225 மாணவர்களுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
ஆன்மிக நகரம்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, புனித நதியான காவிரியின் மடியில் உள்ள ஆன்மிக நகரமான திருச்சியில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரீரங்கம் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு இந்தியனும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்பது கனவு.
இன்று இந்த நகரம் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் மையமாகவும் திகழ்வதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 
எதிர்பார்ப்பு
இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரிய உறுப்பினர்கள், மூன்று பேராசிரியைகள் பல விருதுகளைப் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது. உலகளாவிய கொரோனா தொற்றுநோய் நமது வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் நாசமாக்கியது. கல்வியும் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் கல்வியை உறுதி செய்ததற்காகவும், கோவிட் பாதிப்பை குறைத்ததற்காகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை வாழ்த்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க, தொலைநோக்கு மற்றும் அசாதாரணமான புதுமையான தலைமை மற்றும் மாநில அரசுகள் மற்றும் இந்திய மக்களின் ஒத்துழைப்பின் கீழ், சவாலான கோவிட் சூழ்நிலையை சமாளித்துள்ளோம்.
துடிப்பான அறிவு சமூகம்
ஆனாலும், கொரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை என்ற எச்சரிக்கையின் குறிப்பை ஒலிக்க விரும்புகிறேன். பல நாடுகள் இன்னும் அதன் பாதிப்பில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நேரத்தில் நமது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போடுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்துங்கள்.
தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.) 2020 என்பது பாரதிதாசன் மற்றும் அவரது வழிகாட்டியான சுப்ரமணிய பாரதியின் கனவான இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர ஆவணமாகும். இது உலகை வழிநடத்தும் இந்தியா. இது பாரதத்தை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவு சமூகமாக மாற்றுவதற்கு உதவும். அனைத்து கல்வி நிறுவனங்களும், முதன்மை முதல் மூன்றாம் நிலை வரை அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 
மேலும், கடைசி சில நிமிடங்கள் அவர் தமிழில் பேசினார்.
 விழாவில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story