கர்நாடகத்தில் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை - பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
கர்நாடகத்தில் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
பெங்களூரு:
வழிகாட்டுதலை வெளியிடவில்லை
கர்நாடகத்தில் சில தனியார் பள்ளி-கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளிகளை மூட தயங்க மாட்டோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார். இதனால் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இதுவரை 172 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் குணம் அடைந்துள்ளனர். விடுதிகளில் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றி சாப்பிட வேண்டும். குளிக்க செல்லும்போதும் ஒன்றாக செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். ஆனால் இதுகுறித்து வழிகாட்டுதலை வெளியிடவில்லை.
மூடும் திட்டம் இல்லை
1 முதல் 10-ம் வகுப்பு வரை குழந்தைகளை கொரோனா தாக்கவில்லை. பி.யூ.கல்லூரிகளில் மட்டும் வைரஸ் பரவியது. கொரோனா தாக்கியவர்கள் நன்றாக உள்ளனர். 8 உண்டு உறைவிட பள்ளிகளில் கொரோனா பரவியது. இதற்கு ஏதாவது தனியாக வழிகாட்டுதல் வெளியிட வேண்டுமா? என்று நிபுணர்களை கேட்டோம். அவர்கள் வழிகாட்டுதல் தேவை இல்லை என்று கூறிவிட்டனர்.
மருத்துவ குழுக்களை அமைத்து உண்டு உறைவிட பள்ளிகளுக்கு நேரில் சென்று குழந்தைகளை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். கல்வித்துறை மற்றும் மருத்துவ துறையினரை உள்ளடக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். கல்வி நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்க இந்த குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை. குழந்தைகள் ஆர்வமாக பள்ளிகளுக்கு வருகிறார்கள். அதனால் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளே தொடர்ந்து அமலில் இருக்கும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story