ஓமலூர் அருகே விஷசாராயம் குடித்த 2 பேர் சாவு-உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் பரிதாபம்
ஓமலூர் அருகே உறவினர் இறந்ததால் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் விஷசாராயம் குடித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே உறவினர் இறந்ததால் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் விஷசாராயம் குடித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துக்க நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 80). இவர் கடந்த 1-ந் தேதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த நிலையில் குமாரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாராபுரம் புதூர் பகுதியை சேர்ந்த அவரது தம்பி தட்சிணாமூர்த்தி (65) மற்றும் சங்ககிரி பைபாஸ் குப்பனூர் பகுதியை சேர்ந்த குமாரின் மருமகன் ராமன் (45) மற்றும் உறவினர்கள் வந்தனர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் குமாரின் துக்க நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய சடங்குகள் நடந்தன. பின்னர் அதிகாலை 4 மணி அளவில் தட்சிணாமூர்த்தி, ராமன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு பின்புறம் சென்று சாராயம் குடித்ததாக கூறப்படுகிறது.
பரிதாப சாவு
பின்னர் தட்சிணாமூர்த்தி, அங்கு குமாரின் வீட்டின் ஒரு அறையில் படுத்துக்கொண்டார். ராமன் மட்டும் துக்க நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் ராமன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே உறவினர்கள் தட்சிணாமூர்த்தியை வந்து பார்த்த போது அவரும் வாந்தி எடுத்து மயங்கி இறந்து கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், கூடுதல் சூப்பிரண்டு பொற்செழியன், ஓமலூர் துணை சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உறவினர் வீட்டின் பின்புறம் கிடந்த 4 மதுபான பாட்டில்களை கைப்பற்றினர். தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, ராமன் ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விஷ சாராயம்
இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் 2 பேரும் விஷ சாராயம் குடித்ததால் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story