உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு:சேலம் மாநகராட்சியில் 7.19 லட்சம் வாக்காளர்கள்


உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு:சேலம் மாநகராட்சியில் 7.19 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 10 Dec 2021 4:11 AM IST (Updated: 10 Dec 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 60 வார்டுகளில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம்:
சேலம் மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 60 வார்டுகளில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகராட்சியில் 60 வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 
இதில் தி.மு.க. மத்திய மாவட்ட பொருளாளர் சுபாஷ், நிர்வாகிகள் எஸ்.ஆர்.அன்வர், பழக்கடை கணேசன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மாரியப்பன், ஜெகதீஷ்குமார், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், தே.மு.தி.க. மாநகர துணை செயலாளர் கோபிநாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் சந்தியூர் பார்த்திபன், திரிணாமுல் காங்கிரஸ் மாநில தலைவர் மாஸ் கணேஷ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:-
7.19 லட்சம் வாக்காளர்கள்
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 523 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 66 ஆயிரத்து 751 பேரும், இதர வாக்காளர்கள் (மூன்றாம் பாலினம்) 87 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 19 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர். 
அதேநேரம் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாறுதல் உள்ளிட்டவை மேற்கொள்ள விரும்பினால் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். நகர்ப்புற தேர்தல் வேட்புமனு தொடங்குவதற்கு முன்பு வரையிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். அதன்பிறகு வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பெண் வாக்காளர்கள் அதிகம்
சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் 1 முதல் 60 வார்டுகள் உள்ளன. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான இடஒதுக்கீடு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 30 வார்டுகளில் ஆண்களும், 30 வார்டுகளில் பெண்களும் போட்டியிடுவார்கள். 
அதேநேரத்தில் 8-வது வார்டில் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 381 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக 45-வது வார்டில் 8 ஆயிரத்து 969 வாக்காளர்களும் உள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 60 வார்டுகளிலும் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story