மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் திருப்பனந்தாள் அருகே பரபரப்பு


மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் திருப்பனந்தாள் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 11:20 AM IST (Updated: 10 Dec 2021 11:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பனந்தாள் அருகே மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பனந்தாள்:-

திருப்பனந்தாள் அருகே மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

தற்காலிக மின் ஊழியர்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த தனவேல் மகன் தேவா (வயது28). மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விரக்தி அடைந்த தேவா திடீரென அவருடைய வீட்டின் வாசலில் உள்ள புளிய மரத்தில் ஏறி கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் கயிற்றை லாவகமாக கீழே பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து தேவா, மரத்தின் மேல் பகுதியில் கிளைக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுபோதை

இதுகுறித்து அப்பகுதியினர் திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாறன் தலைமையில் 5 வீரர்கள் அங்கு விரைந்து சென்று, 60 அடி உயரத்தில் மரக்கிளையில் நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த தேவாவை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததை அறிந்த தீயணைப்பு படைவீரர்கள், போதை தெளியும் வரை காத்திருக்கலாம் என முடிவு செய்தனர். 
இதனிடையே தேவாவின் கால்கள் மரக்கிளை கிடையே சிக்கிக்கொண்டன. இதையடுத்து அவர் கீழே விழாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் சுர்ஜித், பாலமுருகன் ஆகியோர் மரத்தில் ஏறி அவரை மரக்கிளையிலேயே கட்டி வைத்தனர். 

பொதுமக்கள் பாராட்டு

நள்ளிரவு 2 மணி அளவில் போதை தெளிந்த தேவா கால் மரக்கிளையில் சிக்கியதால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் அலறினார். இதையடுத்து பெரிய அளவிலான ஏணி மற்றும் கயிறு கொண்டு மரத்தில் ஏறிய தீயணைப்பு வீரர்கள் தேவாவை தோளில் தூக்கி கீழே கொண்டு வந்தனர். 
தற்கொலை மிரட்டல் விடுத்தவரை 3 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story