ஹெலிகாப்டர் விபத்தின் புலன் விசாரணை குறித்து போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை
ஹெலிகாப்டர் விபத்தின் புலன் விசாரணை குறித்து போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை
ஊட்டி
முப்படை தலைமை தளபதி பலியான ஹெலிகாப்டர் விபத்தின் புலன் விசாரணை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். விரைந்து 4 அதிகாரிகளை மீட்ட 5 பேரை பாராட்டினார்.
ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தின் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த விபத்து தொடர்பான புலன் விசாரணை மற்றும் விபத்து நடந்தது குறித்து விரிவான ஆலோசனை கூட்டம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் குன்னூரில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் இதர போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விசாரணை அதிகாரி
கூட்டத்தில் தடயவியல் இயக்குனர் சீனிவாசன் விரிவான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். விபத்து தொடர்பாக மேல் குன்னூர் போலீஸ் நிலைய குற்ற 129/2021 பிரிவு 14 வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு குறித்து நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்துக்கு முதலாவதாக சென்று தீக்காயங்களுடன் போராடிய 4 ராணுவ அதிகாரிகளை விரைவாக மீட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ்காரர் சிவா ஆகிய 5 பேரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.
Related Tags :
Next Story