சேப்பாக்கத்தில் திருடசென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபரின் கைகள் கருகியது
சென்னை சேப்பாக்கத்தில் திருடசென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபரின் கைகள் கருகியது. அந்த வாலிபருடன் சென்ற கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மின்சாரம் பாய்ந்தது
சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் இயங்கி வருகிறது. இங்கு சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக அதிக விலையுள்ள பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று அதிகாலையில் 3 பேர் கொண்ட கும்பல், பாதுகாப்பையும் மீறி இந்த குடோனின் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்பெட்டியில் கை வைத்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவரது கைகள் கருகி, வலியால் அலறி துடித்தார்.
இதைக்கண்ட அவரது கூட்டாளிகள் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். குடோனின் உள்ளே அலறல் சத்தம் கேட்டதும், அங்கிருந்த காவலாளிகள் உடனடியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கைகள் கருகிய நிலையில் ஒருவர் இருப்பதை கண்ட அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இருவர் கைது
அதன்பேரில் குடோனுக்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், மின்சாரம் தாக்கியதில் கைகள் கருகிய வாலிபரை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி கைகள் கருகிய வாலிபர், சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முருகன் (வயது 24) என்பதும், அவரது கூட்டாளிகளான பாலாஜி மற்றும் விஜயுடன் சேர்ந்து குடோனில் திருடச்சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாலாஜி மற்றும் விஜயை தேடும் பணியில் ஈடுபட்டனர். தலைமறைவாக இருந்த இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story