முந்தல் மலைக்கிராமத்தில் ஒருங்கிணைந்த சோதனைசாவடி அமைக்க இடம் தேர்வு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
முந்தல் மலைக்கிராமத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு நடத்தி ஒருங்கிணைந்த சோதனைசாவடி அமைக்க இடம் தேர்வு செய்தனர்.
போடி:
போடி அருகே உள்ள முந்தல் மலைக்கிராமத்தில் தற்போது வனத்துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் தனித்தனியாக 2 சோதனைசாவடிகள் உள்ளன. இவற்றில் போடி மெட்டு வழியாக கேரள மாநிலம் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இந்தநிலையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வரி விதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் வணிக வரித்துறை சார்பில் முந்தலில் புதிதாக சோதனை சாவடி அமைக்க வேண்டி இருந்தது.
இதையடுத்து போலீஸ் துறை, வனத்துறை, சுகாதார துறை, வணிக வரித்துறை என 4 துறைகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான இடம் தேர்வு செய்வதற்காக நேற்று காலை மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே ஆகியோர் முந்தல் கிராமத்துக்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். அப்போது தற்போது உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகிலேயே ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அந்த இடத்தை கையகப்படுத்த வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story