விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் இறுதி பயணத்தை வீடியோ எடுத்தவர்கள் பரபரப்பு பேட்டி
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் இறுதி பயணத்தை வீடியோ எடுத்தவர்கள் பரபரப்பு பேட்டி
கோவை
குன்னூர் அருகே விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி பயணத்தை வீடியோ எடுத்தவர்கள், நாங்கள் எந்த விசாரணைக்கும் தயார் என்று பரபரப்பு பேட்டி அளித்தனர்.
ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் கடந்த 8-ந் தேதி காலை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து ராணுவத்துக்கு சொந்தமான அதிநவீன ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் புறப்பட்டு சென்றனர்.
ஹெலிகாப்டர் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு சில கிலோ மீட்டருக்கு முன் உள்ள குன்னூர் நஞ்சப்பா சத்திரம் அருகே அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் பலியானார்கள்.
வீடியோ வைரல்
விபத்தில் சிக்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த காட்சியை அங்கு சுற்றுலா வந்தவர்கள் வீடியோ எடுத்தனர்.
அதில் தாழ்வாக பறந்து செல்லும் ஹெலிகாப்டர், பனி மூட்டத்துக்குள் மறையும் காட்சியும், அதைத்தொடர்ந்து பயங்கர சத்தமும் கேட்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அந்த வீடியோவில், பயங்கர சத்தத்தை தொடர்ந்து, என்னாச்சு.. விழுந்திருச்சா..என்று அதிர்ச்சியுடன் ஒருவர் கேட்பதும் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த வீடியோ காட்சியை எடுத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம்
இது குறித்த தகவல் வெளியானதும் அந்த வீடியோவை தனது செல்போனில் எடுத்த கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த போட்டோ கிராபர் ஜோ பால், அவருடைய நண்பரான காந்திபுரத்தில் அச்சகம் நடத்தி வரும் நாசர் ஆகியோர் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்தனர்.
அவர்கள், போலீஸ் கமிஷனர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து ஜோபால், நாசர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது
சுற்றுலா சென்றோம்
நாங்கள் கடந்த 8-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சுற்றுலா சென்றோம். அங்கு காட்டேரி அருகே சாலையோரம் காரை நிறுத்தி புகைப்படம் எடுத்தோம்.
பின்னர் அங்குள்ள மலை ரெயில் தண்டவாள பகுதியை காண குடும்பத்துடன் சென்றோம்.
அப்போது அந்த வழியாக ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது. உடனே அந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்தோம்.
சில வினாடிகள் மட்டுமே ஹெலிகாப்டர் எங்களது கண்களுக்கு தெரிந்தது. பின்னர் அது பனி மூட்டத்திற்குள் சென்று மறைந்தது.
பலத்த சத்தம் கேட்டது
ஹெலிகாப்டர் எங்களது கண்களில் இருந்து மறைந்த சில வினாடிகளில் கீழே விழுந்தது போன்ற பலத்த சத்தம் கேட்டது.
அதை கேட்டதும் நாங்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தோம். ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்பது மட்டும் எங்களுக்கு புரிந்தது.
முதலில் நாங்கள் அதை சுற்றுலா பயணிகளுக்கான ஹெலிகாப்டர் என்றுதான் நினைத்தோம்.
ஆனாலும் நாங்கள் காரை எடுத்து கொண்டு ஹெலிகாப்டர் விழுந்த இடம் எதுவும் தெரிகிறதா? என்று தேடி பார்த்தோம். எங்களது கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.
போலீசில் தெரிவித்தோம்
இதனால் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றோம். அப்போது டி.வி.யில் ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தி வெளியானது.
உடனே நாங்கள் எடுத்த வீடியோ மற்றும் நாங்கள் பார்த்த சம்பவத்தை தெரிவிப்பதற்காக நீலகிரி கலெக்டர் அலுவலகம் சென்றோம். ஆனால் அங்கு முக்கிய அதிகாரிகள் இல்லை.
அங்கிருந்த ஊழியர் ஒருவர் குன்னூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி கூறினார்.
அதன்படி நாங்கள் குன்னூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம்.
ஆனால் குன்னூரில் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவரை சந்தித்து நடந்தவற் றை விளக்கி கூறினோம்.
அதோடு எங்களிடம் இருந்த வீடியோவை அவரிடம் கொடுத்தோம். மேலும் எங்களது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டு கோவைக்கு திரும்பி வந்தோம்.
தவறான தகவல்
இதனிடையே சிலர் இந்த வீடியோ குறித்தும், எங்களை பற்றியும் தவறான தகவல் பரப்புவது தெரியவந்தது. இதனால் கோவை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் பற்றி கூறி விளக்கம் அளித்தோம்.
மேலும் நாங்கள் எடுத்த வீடியோ, ஹெலிகாப்டர் விபத்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதுகிறோம். இது தொடர்பாக நாங்கள் எவ்வித விசாரணைக்கும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story