பழனி-புதுதாராபுரம் சாலையில் மின்சார ரெயில் பாதை பணிக்காக மூடப்பட்ட ரெயில்வே கேட்; வாகனங்கள் அணிவகுத்து நின்றன


பழனி-புதுதாராபுரம் சாலையில் மின்சார ரெயில் பாதை பணிக்காக மூடப்பட்ட ரெயில்வே கேட்; வாகனங்கள் அணிவகுத்து நின்றன
x
தினத்தந்தி 10 Dec 2021 9:37 PM IST (Updated: 10 Dec 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

பழனி-புதுதாராபுரம் சாலையில் மின்சார ரெயில் பாதை பணிக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பழனி:
தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் திண்டுக்கல்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக தண்டவாளம் அருகில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி-பழனி, பழனி-திண்டுக்கல் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. தற்போது பழனி ரெயில் நிலைய பகுதியில் ராட்சத கிரேன் உதவியுடன் மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. 
இந்தநிலையில் பழனி-புதுதாராபுரம் சாலையில் சத்யாநகர் ரெயில்வே கேட் அருகில் நேற்று தண்டவாளத்தில் மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பகல் 12 மணி முதல் 2 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை என அவ்வப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் பழனியில் இருந்து தொப்பம்பட்டி வழியாக தாராபுரம், திருப்பூர், ஈரோடு செல்லும் வாகனங்கள் கேட்டின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து வாகனங்கள் புதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. ஒருசில வாகனங்கள் பழைய தாராபுரம் சாலையில் சென்றன. இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து மார்ச் மாதம் முதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்றார்.

Next Story