செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு


செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 9:45 PM IST (Updated: 10 Dec 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

உப்புக்கோட்டை:
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை 5 மணியளவில் உப்புக்கோட்டையில் குச்சனூர் மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் அவர் யாரும் எதிர்பாராதவகையில் அங்கிருந்த செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு மளமளவென ஏறினார். பின்னர் அவர் அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். 
பேச்சுவார்த்தை
இதனால் அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கும், போடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன கலா, வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் லதா, போடி தீயணைப்புநிலைய அலுவலர் சக்திவேல் மற்றும் உப்புக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வினோத்குமாரிடம் கீழே இறங்கி வருமாறும், கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கி வராமல் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவாறே இருந்தார். 
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாலை 6 மணியளவில் அவரை செல்போன் கோபுரத்திலிருந்து கீழே இறங்க செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தேனி மாவட்டத்தில் அதிக அளவில் போலி நகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார், அவரை வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவத்தால் உப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story