921 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடி நலத்திட்ட உதவிகள். அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
திருவண்ணாமலையில் நடந்த விழாவில் 921 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நடந்த விழாவில் 921 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
ரூ.1¾ கோடி நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 540 செவிலியர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் உதவித்தொகை, கொரோனாவால் இறந்த 281 குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம், 83 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணிநியமன ஆணை, செங்கம் தாலுகா முன்னூர் மங்கலம் கிராமத்தில் அருந்ததி இன மக்கள் 15 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஆரணி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி கொரோனாவால் மரணமடைந்த நாராயணசாமியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் என 921 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 72 லட்சத்து 70 ஆயிரத்துக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கு நிகழ்ச்சி நடந்தது.
சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் கலெக்டர் பிரதாப் (வளர்ச்சி) உள்பட பலர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
வேலைவாய்ப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்கட்டமாக 83 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தடுப்பூசி போட பலர் தயக்கம் காட்டினர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி போட்டுக்கொண்டு முன்னுதாரணமாக திகழ்ந்தார். தமிழகத்தில் 82 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 86 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதற்கு பாடுபட்ட செவிலியர்கள், ஊழியர்களுக்கு நன்றி. தொற்று உருமாற்றம் கொண்டு பரவுகிறது. இதை தடுக்கவே தடுப்பூசி போட மக்களை வலியுறுத்துகிறோம். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
பலர் வேலை கேட்டு மனு அளிக்கின்றனர். அதற்காக தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நாளை (இன்று) நடத்தப்படுகிறது. அதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரெயில்வே மேம்பாலம்
பின்னர் அவர் அளித்த பேட்டியில், திருவண்ணாமலை அண்ணாசாலை ரெயில்வே மேம்பாலப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும். புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 5 கிராமங்களில் பணி முடிந்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மு.பெ.கிரி, ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றியக் குழு தலைவர் கலைவாணி கலைமணி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மருத்துவ அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story