ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ400க்கு விற்பனை
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ400க்கு விற்பனை
திருப்பூர்
தமிழகம் முழுவதும் தக்காளி விலை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் தற்போது ‘முருங்கைக்காய்’ விலை உச்சத்தில் உள்ளது. திருப்பூரில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.400-க்கு விற்பனை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்த காரணத்தால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி அதிக அளவில் நாசமடைந்துள்ளதால் அதன் விலை கிடு,கிடுவென உயர்ந்து அதிகபட்சமாக கிலோ ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்தனர். இதேபோல் பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்த நிலையில் தற்போது முருங்கைக்காயின் சீசன் முடிவடைந்துள்ளதால் முருங்கைக்காய்க்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்லடம், பொங்கலூர், குண்டடம், வெள்ளகோவில் உள்ளிட்ட திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து முருங்கைக்காய் மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. இதனால் தற்போது மராட்டிய மாநிலம் நாசிக்கிலிருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதுவும் குறைந்த அளவிலேயே வருவதால் திருப்பூரில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மிரளும் இல்லத்தரசிகள்
இவ்வாறு ராக்கெட் வேகத்தில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் மிரண்டு போய் உள்ளனர். ஒரு முருங்கைக்காயானது அதன் அளவிற்கு தகுந்தவாறு சுமார் ரூ.20 முதல் 50 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் முருங்கைக்காய் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளும் முருங்கைக்காய் வாங்குவதற்கு தயக்கம் கொள்கின்றனர். திருப்பூரில் உள்ள மார்க்கெட்டுகளில் பெரும்பாலான கடைகளில் முருங்கைக்காய் இல்லை. இதனால் மார்க்கெட்டில் முருங்கைக்காயை தேடி அலைய வேண்டியுள்ளது. விஷேச நிகழ்வுகளுக்கு மட்டுமே தற்போது ஒரளவிற்கு முருங்கைக்காய் விற்பனையாகி வருகிறது. வீடுகளில் முருங்கைக்காயை மறந்து விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இது பணக்காரர்களின் காய்கறியாக மாறியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story