அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
x
தினத்தந்தி 10 Dec 2021 10:52 PM IST (Updated: 10 Dec 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

உடுமலை, 
உடுமலையில் ரூ.5 கோடியே 56 லட்சத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
உடுமலையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. தற்போது உடுமலை கொழுமம் சாலையில் கண்ணமநாயக்கனூர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வரும் இந்த தொழிற்பயிற்சி மையத்தில் பொருத்துனர் (பிட்டர்), மின்சார பணியாளர் (எலக்ட்ரீசியன்), கம்பியாள் (ஒயர் மேன்), மோட்டார் மெக்கானி, பற்ற வைப்பவர் (வெல்டர்) ஆகிய பாடவகுப்புகள் உள்ளன.  
 இதில் வெல்டர் பாடம் ஒரு வருடபடிப்பாகும். மற்ற பாடங்கள் 2வருட படிப்பாகும். இதில் ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 124 மாணவ, மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதன்படி இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 248 ஆக இருக்கும்.
சொந்த கட்டிடம்
வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு உடுமலை எலையமுத்துர் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே தமிழ் நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கான இடத்தில் ரூ.5 கோடியே 56 லட்சத்தில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் சுமார்
3½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தரைத்தளம் 1,481.93 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல்தளம் 525.35 சதுர மீட்டர் பரப்பளவிலும் என மொத்தம் 2,007.28 சதுரமீட்டர் அளவிற்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
 இதில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் வகுப்பறைகள், இந்த வகுப்புகளுக்கான தனித்தனி தொழிற்பயிற்சி கூடங்கள் மற்றும் அனைத்து பாடப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கணினி பரிசோதனை கூடம் ஆகியவை இடம்பெறும். அத்துடன் இந்த தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாணவர்களுக்கு மட்டுமான தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஒவ்வொன்றும் 280 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த விடுதியில் மொத்தம் 70 மாணவர்கள் தங்கலாம்.
பணிகள் தீவிரம்
இந்த தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் தற்போது வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்துவருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்டபணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்துப்பணிகளையும் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story