டிரைவர், கண்டக்டர் மீதான தமிழக அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல நாகர்கோவிலில் முத்தரசன் பேட்டி


டிரைவர், கண்டக்டர் மீதான தமிழக அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல நாகர்கோவிலில் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2021 11:12 PM IST (Updated: 10 Dec 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்டால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும் என அறிவித்த தமிழக அரசின் முடிவு ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், 
மாணவர்கள் பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்டால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும் என அறிவித்த தமிழக அரசின் முடிவு ஏற்புடையதல்ல  என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முத்தரசன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக சென்று ஆய்வு செய்து, தமிழ்நாடு மக்களின் சார்பில் அஞ்சலி செலுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் பாராட்டத்தக்கது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உடைய அதிநவீன உயர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை நாட்டு மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சார திருத்த மசோதா
மோடியின் தலைமையிலான அரசு, ஜனநாயகத்துக்கு எதிரான போக்கை திரும்ப, திரும்ப கடைபிடித்து வருகிறது. விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். மின்சாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டு வர இருக்கும் மின்சார திருத்த மசோதா மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் படு மோசமாக உள்ளது. இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ.4 ஆயிரம் கோடி நிதி...
மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் செய்தால் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும் என அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் குமரி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.4 ஆயிரம் கோடி நிதி தரும்படி கோரிக்கை விடுத்துள்ளது‌. தமிழக அரசு கேட்கும் இந்த நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். வெள்ள பாதிப்பு தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் இசக்கிமுத்து (குமரி), காசி விஸ்வநாதன் (நெல்லை)மற்றும் நாகர்கோவில் மாநகர செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story