பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவன் கீழே விழுந்து காயம்
வேலூரில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவன் கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.
வேலூர்
வேலூரில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவன் கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவறி விழுந்த மாணவன்
வேலூர் பாகாயம்-காட்பாடி வழித்தடத்தில் தினமும் ஏராளமான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலூர் மாநகராட்சியின் முக்கிய பகுதிகளின் வழியாக செல்வதால் எந்த நேரமும் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை காண முடியும்.
இந்த நிலையில் காட்பாடியில் இருந்து பாகாயம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. தொரப்பாடி பஸ்நிறுத்தத்தில் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் சிலர் பஸ்சில் ஏறினார்கள். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். பஸ் அங்கிருந்து புறப்பட்ட சிறிதுநேரத்தில் படிக்கட்டில் தொங்கிய மாணவன் தவறி கீழே விழுந்தான். இதில், அந்த மாணவனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதனை பக்கவாட்டு கண்ணாடியில் பார்த்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
இந்த சம்பவத்தை பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பாகாயம்- காட்பாடி வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பஸ்சில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பாலிடெக்னிக் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், போக்குவரத்து பணிமனை மேலாளர், பஸ்சை ஓட்டிய டிரைவர், கண்டக்டர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். காலை, மாலை வேளைகளில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால் உடனடியாக பஸ்சை நிறுத்தி அருகேயுள்ள போலீஸ் நிலையத்துக்கு டிரைவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story