ஜி.எஸ்.டி. உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கரூரில் ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு
ஜி.எஸ்.டி. உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கரூரில் ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.5 கோடி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கரூர்,
ஜி.எஸ்.டி. உயர்வு
காட்டன் துணிகளுக்கும், ஜவுளி துணிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான டையிங், பிரிண்டிங் மற்றும் பல ஜவுளித்துறை சார்ந்த தொழில்களுக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இதையொட்டி தமிழ்நாடு அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, கரூர், நாமக்கல், எடப்பாடி, பல்லடம், சோமனூர், திருப்பூர், வெண்ணந்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு
இதில் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படும் ஜி.எஸ்.டி.யால் ஜவுளி தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்படும் என்றும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள அடைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி கரூரில் உள்ள செங்குந்தபுரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், மகாத்மா காந்தி சாலை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கரூர் வீவிங் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் அதன் உறுப்பினர்கள் சுமார் 200 ஜவுளி நிறுவனங்களை அடைத்து உற்பத்தி நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும் அதனை சார்ந்த விசைத்தறி கூடங்களும் அடைக்கப்பட்டிருந்தன.
ரூ.5 கோடி உற்பத்தி பாதிப்பு
இதுகுறித்து கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 7 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றன.
இந்தநிலையில் வீவிங் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் ஒருநாள் ஜவுளி நிறுவனங்களை அடைத்து உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டதால் கரூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஜவுளித்துறை மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story