மும்பை மேயருக்கு கொலை மிரட்டல் கடிதம் மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படைகள் விரைந்தன


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 Dec 2021 12:24 AM IST (Updated: 11 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கருக்கு கடிதம் மூலமாக வந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படைகள் விரைந்தன.

மும்பை,
மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கருக்கு கடிதம் மூலமாக வந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படைகள் விரைந்தன. 
கொலை மிரட்டல் கடிதம்
மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் பைகுல்லாவில் உள்ள மேயர் பங்களாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தாதரில் உள்ள அவரது பழைய வீட்டு முகவரிக்கு நேற்று காலை கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை படித்து மேயர் அதிர்ச்சி அடைந்தார். 
அதாவது அந்த கடிதத்தில் மேயர் கிஷோரி பெட்னேக்கருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் குறித்து தரக்குறைவான வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது.
மேயர் கண்ணீர்
இதுகுறித்து கிஷோரி பெட்னேக்கர் நிருபர்களிடம் கூறுகையில், "கடிதத்தை படித்த போது அதில் இருந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணாக என்னால் அந்த கடிதத்தை தொடர்ந்து படிக்க முடியவில்லை. என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி இருந்தனர். இதற்கு முன் அரசியல் வாழ்க்கை பற்றி தான் விமர்சிப்பார்கள். தற்போது என்னையும், எனது குடும்பத்தையும் குறிவைக்கிறார்கள். மிரட்டல் கடிதம் உரன் பகுதியில் இருந்து வந்து உள்ளது. அதை விஜேந்திர மாத்ரே என்பவர் எழுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த கடிதம் பன்வெலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதில் எனது பழைய வீட்டின் முகவரி உள்ளது. சாதாரண நபரால் இதுபோன்ற கடிதத்தை எழுத முடியாது. மும்பையில் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது" என கண்ணீருடன் கூறினார்.
 தனிப்படைகள் விரைந்தன
மேலும் கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக மேயர் பைகுல்லா போலீசுக்கு புகார் அளித்தார். குற்றாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீலுக்கும் கடிதம் எழுதினார். 
இதற்கிடையே புகார் குறித்து பைகுல்லா போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர். இதில் மர்மநபர் மேயரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டி இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நிலையில் மர்ம ஆசாமியை பிடிக்க உரண், கார்கர், பன்வெல், நவிமும்பை, ராய்காட் ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
பரபரப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார், மேயர் கிஷோரி பெட்னேக்கர் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 
இதுதொடர்பாக போலீசார் ஆஷிஸ் செலாரை கைது செய்து விடுவிக்கப்பட்ட நிலையில், மேயருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story