பேராம்பூர் பெரியகுளத்தின் மதகு சுவர்கள் இடிந்தன
பழமை வாய்ந்த பேராம்பூர் பெரியகுளத்தின் மதகு சுவர்கள் இடிந்து விழுந்தன.
ஆவூர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, பேராம்பூரில சுமார் 2.5 கிலோ மீட்டர் நீளமும், 5 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் நிரம்பும் நீரின்மூலம் அப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விராலிமலை-கீரனூர் சாலையில் அமைந்துள்ள இந்த குளத்தில் 3 கலிங்கிகளும், 6 பெரிய ஷட்டர்கள் கொண்ட மதகுகளும் உள்ளன.
குளம் நிரம்பினால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதற்காக குளத்து கரையின் நடுப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் 1933-ம் ஆண்டு 6 ஷட்டர்கள் கொண்ட மதகுகள் கட்டப்பட்டன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மதகின் மேற்பகுதியான விராலிமலை, கீரனூர் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிதாக மாற்று பாலம் அமைத்து அதன் வழியே தற்போது வரை போக்குவரத்து திருப்பி விடப்பட்டு வருகிறது.
அதிகமான மழை
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விராலிமலை பகுதியில் சரிவர மழை பெய்யாததால் பேராம்பூர் பெரியகுளம் முழுமையாக நிரம்பவில்லை. இதனால், அதில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படும் மதகுகள் பராமரிக்கப்படாமல் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மதகுகளின் மேற்பகுதியில் மின்னல் தாக்கியதில் அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அந்த மதகுகளை அகற்றிவிட்டு புதிதாக பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு விராலிமலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பேராம்பூர் பெரியகுளம் நிரம்பியது. குளத்தில் இருந்த உபரி நீரானது 3 கலிங்கிகள் வழியாகவும், 6 பெரிய மதகுகள் வழியாகவும் வெளியேற்றப்பட்டது.
மதகின் சுவர்கள் இடிந்து விழுந்தன
இந்நிலையில் சேதமடைந்த பேராம்பூர் பெரியகுளத்தின் மதகு சுவர்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தன. இதனை அறிந்த அப்பகுதி நேற்று காலை அப்பகுதியில் திரண்டனர். பின்னர் இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வெகுநேரமாகியும் யாரும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து பேராம்பூரில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விராலிமலை தாசில்தார் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி சரவணன் தலைமையில் நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
மணல் மூட்டைகளால் பாதுகாப்பு அரண்
பின்னர் குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷட்டர்களை திறந்து தண்ணீரை வெளியேற்றினர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷட்டர்களின் உள்பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் சுமார் 3 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர்.
Related Tags :
Next Story