காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை
நெய்வேலியில் காதலி இறந்த துக்கத்தில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
நெய்வேலி தெர்மல் புதுஜோதி தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் குழந்தை தமிழரசன்(வயது 20). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது.
இதுபற்றி அறிந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அந்த இளம்பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்ததில் இருந்து குழந்தை தமிழரசன் யாருடனும் பேசாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்ததாக தெரிகிறது.
காதலன் தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தை தமிழரசன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் விரைந்து வந்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட குழந்தை தமிழரசன் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தாய் கவுரி (42), நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story