நோயாளிகளை மூளைச்சலவை செய்து தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய 2 ஊழியர்கள் நீக்கம்
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை மூளைச்சலவை செய்து தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை மூளைச்சலவை செய்து தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி
தென்மாவட்டங்களில் மிகப்பெரிய ஆஸ்பத்திரியாக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி விளங்குகிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதுபோல் உள்நோயாளிகளாகவும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை அரசு மருத்துவமனையை விட, மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை கிடைக்கும் என மூளைச்சலவை செய்து, சில பணியாளர்கள் அங்கு அனுப்பி விடுவதாக புகார் எழுந்தது.
எனவே அதுபற்றி விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. விசாரணையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட வார்டு மேலாளர் சார்லஸ் மற்றும் லேப் டெக்னீசியன் அருணா ஆகிய 2 ஒப்பந்த ஊழியர்கள், நோயாளிகளை தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லுமபடி கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.
பணி நீக்கம்
இதுதொடர்பாக சென்னையிலிருந்து வந்த மருத்துவ குழுவும் விசாரணை மேற்கொண்டது.
முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து பணத்திற்காக அவர்கள் 2 பேரும் புரோக்கர்களாக செயல்பட்டதும் உறுதியானது.
இதனை தொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல், அந்த மருத்துவ பணியாளர்கள் 2 பேரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இது போன்று ஆஸ்பத்திரிக்கு அவப்பெயரை விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இதுமட்டுமின்றி அரசு ஆஸ்பத்திரி தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருக்கும்பட்சத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளித்தால் அது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story