அரசுப்பள்ளிக்கு கோவில் நிலத்தை வழங்குவது குறித்து நடவடிக்கை
அரசுப்பள்ளிக்கு கோவில் நிலத்தை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிரங்காட்டுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமம் மலை அடிவாரத்தில் உள்ளது. விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். இந்த கிராமத்துக்கு முறையான போக்குவரத்து வசதி கிடையாது. கிணறுகள், பம்புசெட் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகளை நத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். இந்த கிராமத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மட்டும் இருந்து வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது கிராமத்தை சேர்ந்த 285 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் வெளியூர் சென்று மேல்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே, கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று 10-ம் வகுப்பு வரை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய பள்ளியானது, அங்குள்ள கோவில் நிலத்தில் குறைந்த பரப்பளவில் அமைந்துள்ளது. அந்த நிலத்துக்கு அருகே உள்ள மற்றொரு கோவிலுக்கு சொந்தமான மானிய நிலத்தில் பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அந்த நிலத்தில் பள்ளிக்கட்டிடம் கட்ட வசதியாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வசம் வழங்க நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story