மாநகராட்சி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கண்டனம்
மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை பைபாஸ் ரோடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் நாகமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமத்தில் மாநகராட்சி வார்டு-76 பைபாஸ்ரோடு அருள்நகர், வ.உ.சி. தெரு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ரோடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், பாதாளச்சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, தொட்டி மூடிகள் திறந்து கழிவுநீர் ஓடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரப்பும் கிருமிகள், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர். வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “குடிமக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றவில்லை எனில் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என மாநகராட்சி வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், “மனுதாரரின் கோரிக்கையை ஒரு வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரிடும்” என எச்சரித்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story