சார் பதிவாளர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்
களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார்.
களக்காடு:
களக்காடு நகரத்தெருவை சேர்ந்தவர் மேகலா (வயது 59). இவரது கணவர் சுதாகர் கடந்த 2009-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார். இதுபோல அவரது மகனும் கடந்த 2017-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து மேகலா தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலங்கள் சிதம்பரபுரத்தில் உள்ளது. இந்த நிலங்களை சிலர் மோசடியாக பத்திர பதிவு செய்து, அவரிடம் இருந்து அபகரிக்க முயற்சி செய்து வருவதாக மேகலா புகார் தெரிவித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை எஸ்.பி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் மற்றும் பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்துள்ளார். மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி மேகலா களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த மேகலா, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடி அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story