விவசாயிகள் சாலையை களமாக்கி நெல்லை கொட்டி மறியல்


விவசாயிகள் சாலையை களமாக்கி நெல்லை கொட்டி மறியல்
x
தினத்தந்தி 11 Dec 2021 2:06 AM IST (Updated: 11 Dec 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

நெல்கொள்முதல் நிலையம் மூடியதால் விவசாயிகள் சாலையை களமாக்கி நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

சோழவந்தான், 
நெல்கொள்முதல் நிலையம் மூடியதால் விவசாயிகள் சாலையை களமாக்கி நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
கொள்முதல்
சோழவந்தான் அருகே  ஊத்துக்குளி, மட்டையான், தென்கரை, புதூர், மலைப்பட்டி, கச்சிராயிருப்பு உள்பட 8 கிராமங்களில் நெல் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 2 ஆயிரம் மூடைக்கு மேல் உள்ளது. தற்போது 150 ஏக்கரில் தயார்நிலையில் நெல் அறுவடை செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. ஏற்கனவே கடன் வாங்கி தொடர் மழையால் பயிர் சேதம் அடைந்து மீதி உள்ள நெற்கதிர்களை அறுவடை செய்து அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவியலாக குவித்து வைத்துள்ளோம். இதுபோக கூடுதலாக கமிஷன் கேட்கிறார்கள். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது என்று விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நெல் கொள்முதல்நிலையம் மூடப்பட்டதால் வேதனை அடைந்த விவசாயிகள், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பாக மெயின் சாலையை களமாக்கி நெல்லை குவித்து டிராக்டர் களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், தென்கரை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் செல்வம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று காலைக்குள் கொள்முதல் செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story