சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படங்களை வைக்க முயன்றதால் பரபரப்பு-போலீசாருடன் வாக்குவாதம்


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படங்களை வைக்க முயன்றதால் பரபரப்பு-போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Dec 2021 4:43 AM IST (Updated: 11 Dec 2021 4:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அம்பேத்கர் உருவப்படங்களை சிலர் வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் நடந்தது.

சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அம்பேத்கர் உருவப்படங்களை சிலர் வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் நடந்தது.
போலீசாருடன் வாக்குவாதம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவப் படங்களை வைப்பதற்காக அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் சி.முருகன், தாய் தமிழகம் மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராம்ஜி ஆகியோர் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று முள்ளுவாடி கேட் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு தங்களது கைகளில் அம்பேத்கர் உருவப்படங்களை எடுத்து வந்தனர்.
அப்போது, கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அம்பேத்கர் உருவப்படங்களை எடுத்து வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களில் அம்பேத்கர் படங்களை வைக்க முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கர் உருவப்படம்
இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை சந்தித்து மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படங்களை வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனுவை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பெரியசாமி, சதாசிவம் ரவி, காரிப்பட்டி மகேந்திரன் மற்றும் பலர் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி டாக்டர் அம்பேத்கர் உருவப்படங்களை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர்.

Next Story