கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்க்க முடியும்
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்க்க முடியும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பஸ் நிலையம் அருகே சன்னதி தெரு பகுதியில் சினிமா திரையரங்கம் இயங்கி வருகிறது. திரையரங்கு முன்பு கொரோனா தடுப்பூசி முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திரையரங்குக்கு சினிமா பார்க்க வரும் அனைவரிடமும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான குறுஞ்செய்தி இருக்க வேண்டும். இல்லை எனில் திரைப்படம் பார்க்க அனுமதி மறுக்கப்படும்.
மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே திருவள்ளூர் மாவட்ட திரையரங்குகளில் இன்று(சனிக்கிழமை) முதல் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 81 சதவீதம் பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இன்று (சனிக்கிழமை,) சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.
பொதுமக்கள் அதிகம் கூடும் மிக பெரிய துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்படும் மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தேவைப்பட்டால் டாஸ்மாக் கடைகள், கோவில்கள் போன்றவற்றின் முன்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே அனுமதி என்ற வரையறை தேவைப்பட்டால் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story