ஆண்டிப்பட்டி நர்சு கொலை வழக்கில் தொடர்பா? போலீஸ் விசாரணைக்கு பயந்து அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை பரபரப்பு தகவல்
ஆண்டிப்பட்டி நர்சு கொலை வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பயந்து அரசு மருத்துவமனை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி மண்டுகோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திர பிரபு (வயது 34). இவர், கம்பம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஈஸ்வரி (34). இவர் போடி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய செல்வி, பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். செல்வியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அதில் அவருடன் பேசிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ராமச்சந்திர பிரபுவின் செல்போன் எண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் ராமச்சந்திரபிரபுவுக்கு தொடர்பு இருக்குமோ என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர்.
காணவில்லை
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு செல்ல இருப்பதாக ராமச்சந்திர பிரபு நேற்று முன்தினம் தனது மனைவி ஈஸ்வரியிடம் கூறினார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் மனைவியை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரி தனது கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. போலீஸ் நிலையத்துக்கும் அவர் விசாரணைக்கு செல்லவில்லை என தெரியவந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரியிடம், ராமச்சந்திர பிரபு பேசும்போது, "நான் தற்கொலை செய்து இறந்தால் ஆயுள் காப்பீடு தொகை ரூ.25 லட்சம் உனக்கு கிடைக்கும்" என்று கூறியுள்ளார். இதனால் ஏற்கனவே தற்கொலை செய்வது குறித்து கணவர் கூறியதால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரி, நேற்று முன்தினம் இரவு தனது கணவரை காணவில்லை என்று பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
தற்கொலை
இதையடுத்து ராமச்சந்திர பிரபு பயன்படுத்திய செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது அவருடைய செல்போன் உத்தமபாளையம் அருகே ஊத்துக்காடு கோம்பை ரோடு சிலுவை குடிசை பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசாரும், ஈஸ்வரி மற்றும் அவருடைய கொழுந்தன் வீரக்குமாரும் நள்ளிரவில் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ராமச்சந்திர பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தனியாக நின்று கொண்டு இருந்தது. அதற்கு அருகில் தேடி பார்த்த போது ராமச்சந்திர பிரபு் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.அவர் விஷம் குடித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து ராமச்சந்திர பிரபு விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story