இறுக்கமான சீருடை அணிந்த மாணவனை தாக்கிய ஆசிரியர்


இறுக்கமான சீருடை அணிந்த மாணவனை தாக்கிய ஆசிரியர்
x
தினத்தந்தி 11 Dec 2021 7:58 PM IST (Updated: 12 Dec 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

கணபதி தனியார் பள்ளியில் இறுக்கமான சீருடை அணிந்து வந்த மாணவனை ஆசிரியர் தாக்கினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணபதி,

கோவை கணபதி உதயாநகரை சேர்ந்தவர் கலாதரன். இவருடைய மகன் மிதுன் (வயது16). இவர் கணபதி சத்திரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 1 வகுப்பு படித்து வருகிறார். 

அந்த பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது. அதை வாங்கிய மாணவர் மிதுன் வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் சீருடையை அணிந்து பார்த்த போது சட்டை அளவில் பெரிதாக இருந்துள்ளது. 

உடனே அவர் தனது தாயாரிடம் சீருடையை கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு கூறி உள்ளார். அதன்படி அவரது தாயாரும் சட்டையை தைத்து கொடுத்தார். 

அந்த சட்டையை அணிந்து கொண்டு மாணவர் மிதுன் நேற்று காலை பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமர்ந்திருந்தார். 

அப்போது பாடம் நடத்த வந்த இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் (வயது34), மாணவர் மிதுனிடம் எதற்காக சட்டையை இவ்வளவு இறுக்கமாக அணிந்து உள்ளாய் எனக்கேட்டு உள்ளார்.

பின்னர் அவர் ஆத்திரம் அடைந்து மாணவர் மிதுனை குச்சியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் மிதுன் வலி தாங்காமல் அலறி துடித்தார். 

சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் ஓடி வந்து மிதுனை மீட்டனர். இயற்பியல் ஆசிரியர் தாக்கியதில் மிதுனுக்கு காது, கை, முதுகு உள்பட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இது குறித்து மிதுன் தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள், பள்ளிக்கு வந்து மாணவர் மிதுனை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இது குறித்து கலாதரன் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் ஆசிரியர் சிவரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பள்ளி மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story