மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் கட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை


மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் கட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2021 8:15 PM IST (Updated: 11 Dec 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் கட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை

கூடலூர்

கூடலூர்- வயநாடு சாலையோரம் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மண் சரிவு

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பாலங்கள் சாலைகள் வெள்ளத்தில் சேதம் அடைந்தது.

கூடலூரில் இருந்து மலப்புரம், வயநாடு பகுதிக்கு செல்லும் சாலைகள் பல மாதங்களுக்கு மேலாக துண்டிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதில் கூடலூர்-வயநாடு செல்லும் சாலையில் பொன்வயல், பொன்னூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையின் நடுவில் விரிசல் உண்டானது.

இரும்பு தடுப்புகள்  

இதனால் வாகன விபத்துகள் நடைபெறாமல் தடுக்க தேவாலா போலீசார் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் இரும்பு தடுப்புகள் அடுக்கி வைத்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது கூடலூர் பகுதியில் பருவ மழைக் காலம் நிறைவு பெற்று உள்ளது. 

இதனால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

தடுப்பு சுவர் கட்ட வேண்டும் 

2 ஆண்டுகளாக பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாடுகாணி, பொன்னூர் உள்பட பல இடங்களில் சாலையோரம் மண் சரிவுகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்தது. ஆனால் இதுவரை சீரமைக்கப்படவில்லை. 

முதற்கட்டமாக கூடலூர்- வயநாடு செல்லும் சாலையோரம் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story