ஹெலிகாப்டர் விபத்து குறித்து 3 வது நாளாக உயர் அதிகாரிகள் ஆய்வு
ஹெலிகாப்டர் விபத்து குறித்து 3 வது நாளாக உயர் அதிகாரிகள் ஆய்வு
ஊட்டி
முப்படை தலைமை தளபதி பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீசார், விமானப்படை, ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக ஆய்வு நடத்தினர்.
ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
விபத்து குறித்து விசாரிக்க காவல்துறை தரப்பில் நீலகிரி சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 5 போலீஸ்காரர்கள் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
உயர் அதிகாரிகள் ஆய்வு
அவர்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், பொதுமக்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
அப்போது மேலும் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தீவிர விசாரணை
குறிப்பாக வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்ப சத்திரம் பகுதி வரைபடம் மூலம் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது குறித்து விசா ரணை நடத்தப்பட்டது. இதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தலா ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு கிராம நிர்வாக உதவியாளர் சுழற்சிமுறையில் இரவு, பகலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வெளி நபர்கள் யாரையும் அனுமதி இன்றி உள்ளே நுழைய விடக்கூடாது, சம்பவ இடத்தில் விமானப்படை, ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்த வந்து செல்வது குறித்தும், தற்போது நிலை குறித்தும் மாவட்ட கலெக்டர், குன்னூர் சப்-கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விசாரணை அதிகாரி
விபத்து நடந்த இடத்தில் இரவு, பகலாக விமானப்படையினர் தடயங் களை சேகரித்து வருகின்றனர். முன்னதாக வெலிங்டன் ராணுவ மைய (எம்.ஆர்.சி.) கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.
அதுபோன்று விசாரணை நடத்த மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விமானப்படை ஏர்மார்ஷல் மானவேந்திர சிங் மானவேந்திர சிங் காட் டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்துக்கு காரில் வந்தார். அங்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துடன் ஆலோசித்து விட்டு, விபத்து நடந்த பகுதிக்கு நடந்து சென்று பார்வையிட்டு 3-வது நாளாக ஆய்வு
மேற்கொண்டார்.
விமானப்படையினருடன் ஆலோசனை
அத்துடன் அவர் அங்கு விமானப்படையினருடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு விசாரணையை மேற்கொண்டார். இதனால் அங்கு அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப் படவில்லை.
அதுபோன்று உயர் அதிகாரிகள் சிலரை புகைப்படம் எடுக்கக்கூடாது என்று ராணுவத்தினர் கூறினர். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி குன்னூரில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் முடிவு
இந்த நிலையில் ஹெலிகாப்டரில் இருந்து சிதறி விழுந்த ஏ.கே.47 உள்ளிட்ட ரக துப்பாக்கிகள், பிஸ்டல்கள், 2 கை கடிகாரங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும் ஹெலிகாப்டரின் முன் பகுதி, வால் போன்ற பகுதிகளின் பாகங்களை மலைப்பகுதியில் இருந்து மீட்டு எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதி அருகே கிரேன் எடுத்து வர முடியுமா என்று ஆலோசனை நடத்தப் பட்டது. இரவிலும் விளக்கு வெளிச்சத்தில் விசாரணை நடந்து வருவதால் ஹெலிகாப்டர் பாகங்களை மீட்டு விரைவில் எடுத்துச் செல்ல விமானப்படை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story